|
புதுமை வள்ளல்
புனித அந்தோணியாருக்கு இடைவிடா மன்றாட்டு
(செவ்வாய் தோறும் முற்பகல் 11.45 மணிக்கு நடைபெறும் நவநாள் வழிபாடு)
பாடல்
நம்புங்கள் செபியுங்கள் நல்லது நடக்கும் -2
1. துன்பங்களோ துயரங்களோ
சோதனையோ வேதனையோ
பதுவைப் புனிதர் பரிந்துரைப்பார்
எல்லாம் வல்லவர் நடத்தி வைப்பார்
2. மனச்சுமையோ பாரங்களோ
உடற்பிணியோ ஊனங்களோ
பதுவைப் புனிதர் பரிந்துரைப்பார்
எல்லாம் வல்லவர் நலம் தருவார்
3. உயர்ந்தோரோ தாழ்ந்தோரோ
படித்தவரோ பாமரரோ
பதுவைப் புனிதர் பரிந்துரைப்பார்
எல்லாம் வல்லவர் அருள் பொழிவார்
4. வறியவரோ சிறியவரோ
முதியோரோ இளையரோ
பதுவைப் புனிதர் பரிந்துரைப்பார்
எல்லாம் வல்லவர் அணைத்துக் கொள்வார்
முதல் : அன்பு நிறைந்த சகோதரிகளே, சகோதரர்களே, புனிதர்களின் உறவை ஏற்றுக்கொள்பவர்கள்
நாம். புனிதர்கள் இறைவனின் பல்வகை அருட்கொடைகளால் புனித வாழ்வின் நிறைவுக்கு
உயர்த்தப்பட்டு விண்ணகத்தில் இறைவனின் நிறைவான புகழைப் பாடுகின்றார்கள். பரிவோடு
நமக்காகப் பரிந்து பேசுகிறார்கள். எனவே புதுமை வள்ளல் புனித அந்தோனியாரை வேண்டி
இறைவனின் அருட்கொடைகளைப் பெறுவோமாக! நம்மையே புனிதப்படுத்திக்கொள்வோமாக!
புதுமைகள் புரியும் அருள்வரம் பெற்ற புனித அந்தோனியாரே! உம்மைப் போற்றிப் புகழ
இங்கு கூடியிருப்பவர்களின் மன்றாட்டுக்களுக்குச் செவிசாய்த்தருளும். எங்கள்
மனமார்ந்த நன்றியை ஏற்றுக்கொண்டு எங்கள் விண்ணப்பங்களைக் கேட்டு எங்களுக்கு
இறைவனின் அருளைப் பெற்றுத்தாரும்.
எல் : குழந்தை இயேசுவை கரத்தில் ஏந்தும் பேறுபெற்ற புனித அந்தோணியாரே!
துன்பப்படுவோர்;க்கு துணைபுரியும் வள்ளலே! ஏழைகளையும், ஆதரவற்றவர்களையும் அன்புடன்
அரவணைக்கும் நேசத்தந்தையே! இதோ உமது பக்தர்களாகிய நாங்கள் ஆழ்ந்த விசுவாசத்துடனும்,
அசைக்க முடியாத நம்பிக்கையுடனும் உம்முடைய திருத்தலத்திற்கு ஓடி வந்தோம். நீர்
ஏந்தியுள்ள குழந்தை இயேசுவிடம் எங்கள் ஆன்ம, சரீரத் தேவைகளையும், நாங்கள் இப்பொழுது
கேட்கும் விண்ணப்பங்களையும் எடுத்துக் கூறி மன்றாடும்.
முதல் : இறைவனிடம் சக்தி வாய்ந்த புனித அந்தோணியாரே! உமது அன்பையும்
ஆதரவையும் தேடி உம் திருத்தலத்தை நாடி வந்திருக்கும் உம் பக்தர்களைப் புறக்கணிக்காமல்
அன்புடன் அரவணைத்து அருள்புரியும்.
எல் : மகிமையில் விளங்கும் புனித அந்தோணியாரே துன்பப்படுவோரின் துயர்துடைப்பவரே
பாவிகளை அரவணைப்பவரே தாழ்மையாய் உம்மை நோக்கி மன்றாடும் உம் பக்தர்களை பாரும்!
உம் அன்பால் அரவணைத்து ஏற்றுக்கொள்ளும். துன்பதுயரத்தால் வருந்தும் எங்களின்
துயர் நீக்கும். வறுமையில் வாடும் எங்களின் வாழ்வை வளப்படுத்தும் சோதனைகளால்
தாக்கப்படும் எங்களுக்கு மனவலிமையை அளித்தருளும். மன அமைதியின்றி தவித்து அலையும்
எங்களுக்கு ஆறுதல் தாரும். வாழ வழியின்றி தவிக்கும் எங்கள் வாழ்வுக்கு வழிகாட்டும்.
உம்மை நம்பி வந்த எங்களைக் கைவிடாதேயும். எங்கள் விண்ணப்பங்களை ஏற்று எங்கள்
வாழ்வை ஆசீர்வதியும்.
வேண்டுதல்
முதல் : செபிப்போமாக! ஏழைகளையும், ஆதரவற்றவர்களையும் அன்புடன் அரவணைக்கும்
புனிதரே! எங்களின் வறுமை, துன்பம் நீங்கி, மன அமைதியுடனும் குடும்ப சமாதானத்துடனும்
நல்வாழ்வு வாழ் வழிவகுக்க வேண்டுமென்று....
எல் : புனித அந்தோணியாரே, உம்மை மன்றாடுகிறோம்.
முதல் : குழந்தை இயேசுவின் பிரிய நண்பரான புனித அந்தோணியாரே! சிறுவர்
- சிறுமியர் இயேசுவை அன்பு செய்து, ஆன்மீக காரியத்தில் சிறந்து விளங்கவும்,
பெரியவர்களுக்கு கீழ்படிந்து, புண்ணியத்தில் வளரவும், இறைவனால் குறிக்கப்பட்ட
வாழ்க்கை நிலையைத் தெரிந்துகொண்டு உத்தம மக்களாய் வாழவும் தேவையான வரத்தைப்
பெற்றுத் தர வேண்டுமென்று...
எல் : புனித அந்தோணியாரே, உம்மை மன்றாடுகிறோம்.
முதல் : பெற்றோர்கள் தங்கள் அழைத்தலின் மேன்மையை உணர்ந்து, தங்களது
நல்வாழ்வால் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாயிருந்து அவர்களை தெய்வ பயத்திலும்
அன்பிலும் வளர்க்கவும், தங்கள் வாழ்க்கை நிலையின் கடமைகளைப் பிரமாணிக்கமாய்
நிறைவேற்றவும் வேண்டிய உதவியை ஈந்தருள வேண்டுமென்று....
எல் : புனித அந்தோணியாரே, உம்மை மன்றாடுகிறோம்.
முதல் : நோய்களைப் குணமாக்கும் கருணை உள்ளம் படைத்த வள்ளலே! எங்கள்
உடல் நோய்களையம் மனப்பிணிகளையும் போக்கி எங்களுக்கு சமாதானத்தையும் மகிழ்வையும்
பெற்றுத் தந்தருள வேண்டுமென்று....
எல் : புனித அந்தோணியாரே, உம்மை மன்றாடுகிறோம்.
முதல் : புதுமை வள்ளலான புனித அந்தோணியாரே! மரித்தவர்களை உயிர்ப்பித்தவரே,
பாவத்தினால் பலவீனம் அடைந்திருக்கும் எங்கள் ஆன்மாவுக்கு இறைவனின் அருளைப்
பெற்றுத்தந்து, நாங்கள் எங்கள் ஆன்ம வாழ்வை மாற்றியமைத்து புதுவாழ்வு வாழவேண்டுமென்று....
எல் : புனித அந்தோணியாரே, உம்மை மன்றாடுகிறோம்.
முதல் : மெய் மறையைப் பரப்ப ஆர்வத்துடன் பணி புரிந்த அப்போஸ்தலரே! நாங்கள்
எங்கள் விசுவாசத்தில் நிலைத்திருந்து எங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கு எங்களது
எடுத்துக்காட்டான வாழ்வால் கிறிஸ்துவின் உயிருள்ள சாட்சிகளாய் விளங்க உதவ வேண்டுமென்று......
எல் : புனித அந்தோணியாரே, உம்மை மன்றாடுகிறோம்.
முதல் : புனித அந்தோணியாரிடம் நம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விண்ணப்பங்களையும்
மௌனமாக எடுத்துக் கூறுவோம்....
முதல் : நம் அனைவரின் விண்ணப்பங்களையும் இறைவன் ஏற்று அருள்புரியுமாறு
புனித அந்தோணியாரை மன்றாடுவோமாக...
எல் : புதுமை வள்ளலே! உம்மைக் கூவி அழைப்போருக்கு செவிகொடுப்பவரே! உமது
கரங்களால் அரவணைக்கப்பட விரும்பி இனிய குழந்தை இயேசுவிடம் இந்த எங்கள் விண்ணப்பங்களைச்
சொல்லி பரிந்து பேசுவீராக. இவற்றை நாங்கள் அடைந்தால் என்றும் உமக்கு நன்றியுள்ளவர்களாக
இருப்போம். மகிமை பொருந்திய புனிதரே நாங்கள் கேட்பது எங்களுக்கு நல்லதல்ல என்றால்
இதைவி;ட சிறந்ததொன்றை தேவையான ஒன்றை இறைவனிடமிருந்து எங்களுக்கு அடைந்து கொடுத்தருளும்..
நன்றியறிதல்
முதல் : எங்கள் துன்ப துயரத்தை நீக்கி, எஙகள் குடும்பங்களில் அமைதியையும்,
சமாதானத்தையும் நாங்கள் இறைவனின் அன்பில் நிலைத்திருக்கும் அருளையும் பெற்றுக்
கொடுத்ததற்காக....
எல் : புனித அந்தோணியாரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முதல் : எங்கள் மனப்பிணிகளையும், உடல் நோய்களையும் குணமாக்கி, எங்களுக்கு
மன அமைதியையும், உடல் வலிமையையும் அளித்ததற்காக....
எல் : புனித அந்தோணியாரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முதல் : நாங்கள் எல்லா வகையிலும் வேதனையுற்றாலும், ஓடுங்கிபோவதில்லை.
மனக்கலக்கம் அடைந்தாலும், மனம் உடைவதில்லை. துன்புறுத்தப்பட்டாலும் இறைவனால்
கைவிடப்படாமல் இருக்கின்றோம் என்ற நம்பிக்கையை எங்களுக்கு உணர்த்தியதற்காக...
எல் : புனித அந்தோணியாரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முதல் : நாங்கள் சாகவேண்டியவர்களைப் போல் இருந்தாலும், இன்னும் உயிர்
வாழ்கிறோம். துயரத்தில் ஆழ்ந்தவர்களாய் தென்பட்டாலும் எப்பொழுதும் மகிழ்வுடன்
இருக்கிறோம் என்று உணர்ந்து எங்கள் கடமைகளை நாங்கள் நிறைவேற்ற அருள்புரிந்ததற்காக....
எல் : புனித அந்தோணியாரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முதல் : உமது மன்றாட்டால் நாங்கள் இதுவரை அடைந்துள்ள எல்லா ஆன்ம உடல்
மன நலன்களுக்காக...
எல் : புனித அந்தோணியாரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
முதல் : நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அடைந்துள்ள உதவிகளுக்காகப்
புனித அந்தோணியாருக்கு மௌனமாக நன்றி கூறுவோம்.
முதல் : நம் நன்றியறிதல்களை ஏற்று நம் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிக்கும்படி
மன்றாடுவோமாக...
எல் : மகிமை பொருந்திய புனித அந்தோணியாரே! துயருறும் எங்கள் இதய மன்றாட்டுக்களுக்கு
நீர் செவிசாய்த்தருளும். இதுவரை நாங்கள் உம் மூலம் இறைவனிடமிருந்து பெற்றுக்
கொண்ட எல்லா நன்மைகளுக்காகவும் எங்களின் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நாங்கள் என்றும் இறைவனின் அன்பு மக்களாக வாழவும், இவ்வுலக வாழ்வு முடிச்தபின்
உம்மோடு, இறைவனை முகமுகமாய் நித்தியத்திற்கும் தரிசிக்கவும் வேண்டிய பாக்கியத்தை
எங்களுக்கு பெற்றுத்தந்தருளும்.
முதல் : நம் அனைவரும் இணைந்து அந்தோணியார் புகழ்பாடுவோம்..
பாடல்
அற்புதம் காண விழைவோரே – நம் அந்தோணியரிடம் வருவீரே!
1. மாபெரும் தவறும் மரண அவதியும்
மனத்துயர் பழிகளுமே
தொழுநோய்க் கறையும் தொல்பகைப் பேயும்
தொலைவினில் பறந்திடுமே!
2. படுக்கையில் வீழ்ந்து படுந்துயருற்றோர்;
புதுமையாய் எழுந்தனரே
கடலில் வீழ்ந்தோர் கரை வந்து சேர்ந்தார்
கயவரும் கடவுள் கண்டார்!
3. கரங்களைப் பிணைத்த விலங்குகள் முறிய
திமிர்வாதம் ஒழிந்திடவே!
காணாப் பொருள்தனைக் கண்டடைந்தோமெக்
காசினி புகன்றிடவே
4. வறுமையும் விபத்தும் வருத்திடும் பசியும்
வாட்டிடும் பிணி பலவும்
பறந்திடக் கண்ட பக்தர்கள் கோடி
பகருகிறார் சாட்சி!
5. பதுவைப் பதியர் நம் அந்தோணியாரின்
புதுமைப் புகழ் விளங்க!
மூவொரு இறைவன் மகிமையும் பரவ
முடிவிலாத் துதிமுழங்க!
முதல் : தீமை நம்மை அணுகாது. துன்பம் நம் உறைவிடத்தை நெருங்காது.
ஏனெனில் இறைவனே நம் புகலிடம். நம் அரண். அவரையே நாம் நம்பியுள்ளோம்.
- திருப்பாடல் 90
|