|
திருத்தல பங்கில் துறவியர் பணிகள்
உலகம் வளர வளர நமது சிந்தனைகளும், பார்வைகளும், நாம் புனைகின்ற கொள்களும்
விசாலமாகின்றன. ஒரு காலத்தில் துறவு என்பது தன்னந்தனியாக கடவுளை அனுபவிக்க
தன்னை ஒருவன் வருத்திக் கொள்வதாக இருந்தது. இந்திய துறவு முறையும்
அப்படித்தான். இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் நேர்மறையான தாக்கங்களில்
திருச்சபை உலத்தில் இருக்கிறது, அது உலகத்தை விட்டு விலகி அல்ல என்பதை
உரக்க சிந்திக்க வைத்த தாக்கமும் ஒன்று ஆகும். மக்களில் கடவுளைக் காண்பதும்,
உறவுகளில் புனிதத்தை காண்பதும் இன்றைய ஆன்மீகத்திற்கு நாம் தரும் பொருள்
ஆகும்;;. அதன்படி, குடும்பங்களிலும், சமூத்திலும், தனி மனித வாழ்விலும். ஒரு
மனிதன் தேடுகின்ற முழு மனித விழுமியங்களான அன்பு, நீதி, நேர்மை,
சகோதரத்துவம், இரக்கம், சமத்துவம் (நிறைவாழ்வு) மற்றும் ஒருமைப் பாடு
போன்றவைகளை மனிதர்கள் மத்தியில் ஆழமாக வாழ்ந்து காட்டுவது துறவு ஆகும்.
இதைத்தான் கடவுள் தொடக்கத்தில் இருந்தே சொல்லி வந்தார் (எசா. 49.6, மத்.
5.13-15, பிலி. 2.16). கடவுள் இசுராயேல் மக்களை ஒரு சமூகமாக தனக்கு சான்று
பகர அழைத்தார் (வி.ப. 19). அதன்படி இன்றும் துறவியர் தங்கள் வாழ்வை
அர்பணித்து அருள் தரும் சமூகமாக மக்களுக்கு பணி செய்துகொண்டிருக்க
அழைக்கப்படுகின்றனர்.
புளியம்பட்டி தூய அந்தோணியார் திருத்தலப் பங்கு 1954 ஆம் ஆண்டிலேயே
உதயமானாலும், இருபது ஆண்டுகளுக்கு மேலாக எந்த துறவுச் சமூகமும் இங்கே பணி
செய்ய விழையாமல் போயின. 1973 ஆம் ஆண்டில் மதுரை மறை மாநிலத்திலிருந்து
பாளையங்கோட்டை தனி மறைமாவட்டமாக உருவானபின்பு தான் துறவுச் சமூகங்கள் தங்கள்
பணிகளை இத்திருத்தலத்திற்கும் இதை சார்ந்த மக்களுக்கும் ஆற்ற வருவதற்கு
முயற்ச்கிகள் மேற்கொள்ளப்பட்டன. பாளையங்கோட்டை மறைமாவட்ட முதல் ஆயர்
பணியேற்ற பின் வந்த முதல் துறவுச் சமூகமும் கடைசி துறவுச் சமூகமும்
புளியம்பட்டியில் தான் என்பது சிறப்பு. இன்று இத்திருத்தலத்தில் மூன்று
அன்னையர் துறவுச் சமூகங்கள் பணி செய்து கொண்டிருக்கின்றன.
அமலோற்ப அன்னையின் சலேசிய மறைபரப்பு சகோதரிகள் (அ.ச.ம.ச.)
அமலோற்ப அன்னையின் சலேசிய மறைபரப்பு சகோதரிகளின் (அ.ச.ம.ச.) துறவுச் சமூகம்
ஆங்கிலத்தில் Salesian Missionaries of Mary Immaculate என்று
அழைக்கப்படுகிறது. இந்த சபையின் குறிக்கோள் நற்செய்தியை வாழ்வாக்கி அந்த
வாழ்வை ஏழை மற்றும் நலிந்தோரோடும் குறிப்பாக பெண்களோடு பகிர்;ந்து வாழ்வது
ஆகும். புனித பிரான்சிசு சலேசியாரின் ஆன்மீகத்தை பின்பற்றி அருள்பணி. கென்றி
சோமோ என்பவரால் பிரான்சு நாட்டின் தலைநகர் பாரிசில் 1872 அக்டோபர் திங்கள்
15 ஆம் நாளில் தொடங்கப்பட்டது. இந்த துறவுச் சமூகம் இன்று உலக அளவில்
அய்;ந்து கண்டங்களிலும் இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா,
மகாராட்டிரா மற்றும் குசராத் போன்ற மாநிலங்களில் கிறித்தவ விழுமிய வாழ்வை
வாழ்கிறார்கள்.
புளியம்பட்டித் திருத்தலத்தில் 1975 சனவரி 14 ஆம் ஆண்டு அருள்பணி. வு.யு.
பெர்க்மான்சுவால் அமலோற்ப அன்னையின் சலேசிய மறைபரப்பு சகோதரிகளின் (அ.ச.ம.ச.)
துறவுச் சமூக அருள் அன்னையர் தங்கள் பணியை செய்ய அழைக்கப்ட்டனர்.
திருத்தலத்தின் நடுநிலைப் பள்ளியில் இரு அருள் அன்னையர் ஆசிரியர்களாகவும்,
மறைமாவட்டத்தின் திருநெல்வேலி சமூக சேவைச் சங்கத்தின் ஒத்துழைப்பில்
இயங்கும் திரு இதய மருந்தகத்தில் ஒருவர் செவிலியராகவும், மற்றொருவர் பங்கின்
துணைக் கிராமங்களில் நற்செய்தி பணியாளராகவும் இறை மனித விழுமிய பணிகளை
செய்கின்றனர்.
தூய ஆன்னி லூசர்ன் சகோதரிகள்
இந்த துறவுச் சமூகம் ஆங்கிலத்தில் Sisters of St. Anne Luzern என்று
அழைக்கப்படுகின்றது. “கடவுளின் இரக்கமுள்ள அன்பை வெளிக் கொணர்வதற்கு வாழ”
என்ற விருதுவாக்கோடு அருள்பணி. வில்கம் மேயர் அவர்களால் 1909 ஆம் ஆண்டு
நவம்பர் 21 ஆம் நாளில் சுவிட்சர்லாந்தில் அமைக்கப்பட்டது. 1927ஆம் ஆண்டில்
ஆந்திரா மாநிலத்தில் விசயவாடா நகரில் இந்தியாவின் முதல் இல்லம்
ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவில் பிகார், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம்,
மகாராட்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில்
இவர்கள் பணி செய்து கொண்டிருக்கின்றனர்.
அருள்பணி. ஞானப்பிரகாசம் அவர்கள் அழைக்க, 1992 ஆம் ஆண்டில் மே மாதம் 31ஆம்
நாளில் தங்களது இறைமனித விழுமிய பணிகளை திருத்தலத்தின் துணை கிராமமான
கல்லத்திக்கிணறு என்ற இடத்தில் செய்து வருகின்றனர்.
இரு அருள் அன்னையர் திருத்தலத்தின் தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்களாகவும்,
ஒரு சகோதரி திருத்தல காணிக்கை பணத்தை வைத்தே கட்டிய மருந்தகத்தில்
செவிலியராகவும் பணி செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் உடனிருப்பு
மிகவும் பின் தங்;கிய கிராமமான கல்லத்திக்கிணற்றில் உள்ள சிறுவர்
சிறுமியரின் முழு மனித வளர்ச்சிக்கு ஊன்று கோலாகவும், அற்றலாகவும்
இருக்கின்றது என்பது பாராட்டுதற்குரியது.
தூய சார்லசு துறவுச் சமூக சகோதரிகள்
இந்த துறவுச் சமூகமானது 1684 ஆம் ஆண்டு பெலசியம் நாட்டில் வெசு என்னும்
ஊரின் பங்கு குருவாக இருந்த அருள்பணி. அட்ரியான் பிரெசி என்பவரால்
நிறுவப்பட்டது. இறைவனின் இரக்கம் மிகுந்த அன்பையும் கிறித்தவ
மதிப்பீடுகளையும் அனைத்து மக்களுக்கும் குறிப்பாக ஏழைகளுக்கும்
ஒடுக்கப்பட்டோருக்கும் தமது பணிகளால் இயம்புவதே தூய சார்லசு துறவுச்
சமூகத்தின் இலக்கும் இலச்சினையும் ஆகும். இதுவே இச் துறவுச் சமூகத்தின் தனி
வரமும் ஆகும்.
இன்று இவர்கள் பெல்சியம், அர்சென்டினா, போலந்து, ஆப்பிரிக்கா, இத்தாலி,
இந்தியா போன்ற நாடுகளில் பணி செய்கின்றனர். இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா,
ஆந்திரா, கேரளா, மகாராட்டிரா, மத்திய பிரதேசம், பிகார், சார்கண்ட், புது
தில்லி போன்ற மாநிலங்களில் பணி செய்கின்றனர்.
புளியம்பட்டியில், தூய அந்தோணியார் திருத்தலத்தில் சிறப்பாக செயல்பட்டு
வரும் ஆதரவற்ற முதியோர்களுக்கான, “பதுவா முதியோர் இல்லதில்” பணி
செய்கின்றனர். இங்கு இருக்கும் தூய அந்தோணியார் கருணை இல்லத்தை சார்ந்த
மாணவிகளையும் இவர்களே பராமரிக்கின்றனர். இது தவிர ஒரு அருள் அன்னை
திருத்தலத்தின் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகவும், பணியாற்றுகின்றார்.
திருத்தலத்தின் துணை கிராமமான புங்கனூர் மற்றும் கைலாசபுரம் போன்ற
கிராமங்களிலும் நற்செய்தி பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.
|